வியாழன், 10 ஜூன், 2010

அன்பான நண்பர்களே.................

மீண்டும் வருகிறேன்............


மீண்டு வருகிறேன்.


விரைவில்!

செவ்வாய், 6 ஜனவரி, 2009

விடியும் வேளை

வீறு கொண்டு எழுவோம் - இன்னும்
வீரியம் கொண்டு எழுவோம்!
ஒரு நாளும் வீழ்ச்சியில்லை நமக்கு
ஒரு பாழும் சூழ்ச்சியிலும்
தாழ்ச்சியில்லை எமக்கு!
வானிலும் பறப்போம்
நீரிலும் மிதப்போம்
நிலத்திலும் நிலைப்போம் - புதிய
கதவினை திறப்போம்!
தோள்களின் உரம் போதும் - எவ்வித
தோட்டாக்கள் எம்மீது மோதும்?
தரித்திரம் உடைக்க சமத்துவம் நமக்கு
சரித்திரம் படைக்க சாத்திரம் எதற்கு?
அடிமையென்றாலும் உடன்படோம் - நாம்
சிறுமையென்றாலும் உடன்படோம்
தனிமையென்றாலோ முரண்படோம்.
கனவினில் உண்டு நாளை - நிச்சயம்
ஒருநாள் விடியும் வேளை.

திங்கள், 5 ஜனவரி, 2009

யோசிக்க வேண்டிய விசயம்

யோசிக்க வேண்டிய விசயம்

இன்னைக்கும் வழக்கம் போலவே ஆபிஸ்ல ஓப்பி. ஒண்ணும் ஓடலை மோட்டு வளையை பார்த்து யோசிச்சப்ப திடீரென ஒரு எண்ணம். நாமெல்லாம் ( இங்கு நாமெல்லாம்னா அது நான் மட்டும்தான் நீங்க யாரும் பயப்படாதிங்க) இந்த மன்மோகன் சிங் காலத்துல பொறக்காம் ஒரு ராஜ ராஜ சோழன் காலத்துலயோ, இல்லைனா ஒரு மகேந்திர பல்லவன் காலத்துலயோ பொறந்து இருக்கலாம். பொறந்தும் இருந்தா நல்லாத்தான் இருக்கும். அவங்க காலத்துல எல்லாம் ஒரு கம்ப்யூட்டர்தான் உண்டா இல்லை ஒரு கான்பரென்ஸ்தான் உண்டா?

ஆ, ஊனா வேலையும் கத்தியையும் தூக்கிக்கிட்டு சண்டைக்கு போவாங்க இல்லைனா, உளியையும் சுத்தியையும் தூக்கிக்கிட்டு கோயில் கட்டப் போவாங்க. என்ன இப்ப இருக்கிற வசதிகள் அப்ப இருக்காது. அப்படி என்ன பெரிய வசதி? அப்ப அப்ப அரை மணிக்கு ஒரு தரம் வந்து போற கரண்ட் இருக்காது. அப்ப அப்ப மணியடிச்சு காத்து வழியே கழுத்தறுக்கிற செல் போன் இருக்காது (அதுவே கடலை போட பிகர் இருந்தா "செல்ல" போன்). ரிவர்ஸ்ல கியர் போட்டு வீட்ட விட்டு கிளம்ப கார் இருக்காது. கார்ல கேட்கறதுக்கு யுவனோட குத்துப் பாட்டு இருக்காது.

ஆனால், அப்ப இருந்த மனித தன்மையும், கருணையும் இப்ப இருக்குமா? இருக்குதா? சரி சரி சிபி சகரவர்த்தி தன் சதையை புறாவுக்காக அறுத்தார், பேகன் தன் போர்வையை மயிலுக்கு கொடுத்தார்னு நமக்கு நல்லா தெரிஞ்ச மாவையே இங்க நான் அரைக்க போறதில்லை.

ஒரு மன்னன், போரில் தன் பரம எதிரியிடம் தோற்று தன்னுடைய நாட்டை இழந்து, தன்னுடைய நாட்டை விட்டு வெளியேறிப் போகின்ற சமயம், தன்னை தோல்வியுறச் செய்த மன்னன் மீது,தன் மகள், தன் முதல் பார்வையிலேயே கொண்ட காதல் (love at first sight) காரணமாக, தன் மகளை எதிரி மன்னனிடம் சேர்த்து விட்டு சென்றான். தோல்வியுற்ற மன்னன் தனநந்தன், காதலிலும் சேர்த்து வெற்றி பெற்ற மன்னன் சந்திர குப்த மௌரியன். ஒரு ரதத்தில், தனக்கு தேவையான பொருட்களுடனும், தனது இரண்டு மனைவிகளுடனும், தான் பழகிய ஊரை விட்டு, தான் ஆண்ட நாட்டை விட்டு, தன் தலைநகரை விட்டு, மனம் வெறுத்து வெளியேறிப் போகும் சமயம், தன் எதிரியென்று பாராமலும், தன்னை தோற்கடித்தவன் என்றும் பாராமலும், அவனிடம் தன் மகளை விட்டு விட்டு, தன் மகளின் காதலை சேர்த்து வைத்து விட்டு சென்றவன் எவ்வளவு உயர்ந்த மனிதனாக இருக்க வேண்டும்?

இது தன் மகள் வைத்த பாசத்தினால், தனநந்தன் மனமிறங்கி எடுத்த முடிவாக இருக்கலாம். ஆனால் ஒரு மனிதன் தன் சுய மரியாதையில் இருந்து ஒரு படி இறங்கி வருவதே பெரிய விசயம். அப்படி இருக்கையில் ஒரு மன்னன் தன் கௌரவத்தையே விட்டு தருவது என்பது யோசிக்க வேண்டிய விசயம்தான்.

குறிப்பு:
சரித்திரம் பற்றி எழுதி விட்டு குறிப்பு எதுவும் தரவில்லை என்றால் அது சரித்திரமே இல்லை. அதனால் ஒரே ஒரு குறிப்பு மட்டும்.
மன்னன் தன நந்தன் ஒரு உலக மகா கருமி

வெள்ளி, 2 ஜனவரி, 2009

welcome

வணக்கம் புது வருஷம் நானும் ஒரு பிளாக் தொடங்கிட்டேன் உங்க ஆசிர்வாதத்துல ! எல்லார்க்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்